search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் நினைவிடம்"

    காமராஜர் நினைவிடத்துக்காக மெரினாவில் இடம் கேட்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #Kamarajmemorial
    சென்னை:

    மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தி.மு.க. தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால், அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், மெரினாவில் அடக்கம் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் சில வாதங்களை முன்வைத்தனர்.

    கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர்களான ராஜாஜி, காமராஜர் ஆகியோர் மரணம் அடைந்தார்கள்.

    அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி கேட்ட போது, கருணாநிதி மறுத்து விட்டார். எனவே, முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவிடம் இடம் ஒதுக்க முடியாது என்று அரசு சார்பில் வாதாடப்பட்டது.

    தி.மு.க. தரப்பில் வாதாடும் போது, காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று கூறினார்கள்.

    சமூக வலை தளங்களிலும் இது சம்பந்தமாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. காமராஜர் முன்னாள் முதலமைச்சர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் அளிக்க கருணாநிதி மறுத்து விட்டார் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

    காமராஜர் இறந்த போது, அப்போது காங்கிரசில் முன்னணி தலைவர்களாக இருந்தவர்களிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி கூறியதாவது:-

    காமராஜர் இறந்த போது மெரினாவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்கள் வற்புறுத்தினார்கள்.

    இது சம்பந்தமாக கருணாநிதியிடம் கேட்ட போது, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அங்கு அமைக்கப்பட்டுள்ள அண்ணா சமாதி, கடற்கரை அருகே இருப்பதால் பராமரிப்பதில் பெரும் கஷ்டம் இருக்கிறது.

    எனவே, இங்கு காமராஜருக்கு நினைவிடம் வேண்டாம் என்று கருணாநிதி கூறினார். ஆனால், முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் இல்லை என விதிகள் இருப்பதாக அப்படி எதுவும் கருணாநிதி சொல்லவில்லை.



    காந்தி மண்டபம் அருகே நினைவிடம் அமைக்கலாம் என்று கருணாநிதி கூறினார். அதை அப்போதைய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரான ராஜாராம் நாயுடு உடனடியாக ஏற்றுக் கொண்டார். மற்ற காங்கிரஸ் தலைவர்களிடமும் இதுபற்றி கூறியபோது, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    அப்போது காமராஜருக்கு மெரினாதான் வேண்டும் என்று எங்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான எந்த எண்ணமும் இல்லை.

    இவ்வாறு திண்டிவனம் ராமமூர்த்தி கூறினார்.

    காமராஜர் இறந்த போது காங்கிரசின் செயலாளராக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இருந்து வந்தார். அவரிடம் இதுபற்றி கேட்ட போது, கூறியதாவது:-

    சமூக வலைதளங்களில் உண்மையான விவரம் தெரியாமல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

    மெரினாவில்தான் காமராஜருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்று காங்கிரசார் அப்போது வற்புறுத்தவில்லை. சத்தியமூர்த்தி பவனில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

    அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி காந்தி மண்டபம் அருகே நிலம் ஒதுக்கீடு செய்து தருகிறேன். காமராஜர் தியாகி என்பதால் அந்த இடம்தான் பொருத்தமாக இருக்கும். அங்கு இறுதிச்சடங்குகள் செய்து நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

    அதன்படி அங்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. காமராஜரின் தங்கையின் பேரன் முறைப்படி இறுதிச்சடங்குகளை செய்து சிதைக்கு தீ மூட்டினார். அந்த இடத்தில் பின்னர் நினைவிடம் அமைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், காமராஜர் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளவருமான கோபண்ணா கூறும் போது, காந்தி மண்டபத்துக்கு மேற்காக காமராஜருக்கு நினைவிடம் அமைக்கலாம் என்று முடிவு செய்து அப்போதைய பழைய காங்கிரஸ் தலைவர்களை கருணாநிதி ஏற்றுக்கொள்ள செய்தார் என்று கூறினார்.

    ராஜாஜி நினைவிடம் தொடர்பாக அப்போதைய சுதந்திரா கட்சியின் சட்டமன்ற தலைவராக இருந்த எச்.வி. ஹண்டே கூறும்போது, ராஜாஜிக்கு நாங்கள் மெரினாவில் இடம் கேட்கவில்லை.

    அதே நேரத்தில் ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை உடனே கருணாநிதி ஏற்றுக்கொண்டார் என்று கூறினார். #Kamarajmemorial
    ×